அழுகையும் ஒரு மருந்தே! சிரிப்பைப் போலவே அழுவதும் உடலுக்கு நல்லது
Hindinewslive247.com – ச ர ப ப மட ட ம – சிரிப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அழுவதும் அதே அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். உண்மையில், சிரிப்பும் அழுகையும் மனித உணர்வுகளின் இரண்டு முனைகள். சிரிப்பு ஒரு பக்கம் இருந்தால், அழுகை மறு பக்கத்தில் உள்ளது. மனிதர்கள் ஏன் அழ மறுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் அழுகை பலவீனத்தின் அடையாளம் என்று பதில் கூறுவார்கள். உலகில் பலர் கண்ணீரை பலவீனத்தின் அடையாளமாகவும், வெட்கத்துக்குரிய செயலாகவும், குழந்தைத்தனமாகவும் கருதுகிறார்கள். ஆனால், அழுகை உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மை செய்கிறது.
அழுகை பலவீனம் அல்ல!
பல திரைப்படங்களில் “ஆண்மகன் அழக்கூடாது” அல்லது “நான் அழவில்லை, கண்ணு வேர்க்குது” என்று சொல்வதை கேட்டிருப்போம். சிலர் வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அழுவதில்லை. ஆனால், மனநல மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், அழுகையை கட்டுப்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகள் அதிகம். மனம் தாங்க முடியாத அளவுக்கு கஷ்டங்கள் வரும்போது அழுதால், மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியும். மனம் விட்டு அழுதால், மனம் அமைதியாகி தூக்கம் வருவதை உணரலாம். தூங்கி எழுந்தவுடன் மனசோர்வு நீங்கியிருப்பதை உணரலாம்.
“அழுகையை ஒருபோதும் அடக்கக்கூடாது” என்று சில சமயம் கேட்டிருப்போம்.
அழுகையின் மனநல நன்மைகள்
அழுகை நிலைமையை உடனடியாக மாற்றாவிட்டாலும், அது தற்காலிக ஆறுதலையும், உடனடி நிவாரணத்தையும் தருகிறது. அழுகையை அடக்கும்போது, காலப்போக்கில் நோய் எதிப்பு மண்டலம் பலவீனப்படலாம். மேலும், அழுகை உணர்வை கட்டுப்படுத்துவதால், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். மக்கள் தங்கள் அழுகையை மறைக்க முயற்சித்தால், அவர்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 2008-ம் ஆண்டு 30 நாடுகளை சேர்ந்த 4,300 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அழுகைக்கு பிறகு அவர்களின் மன மற்றும் உடல்நலம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும், அந்த ஆய்வில் அழுகை 88.8% மக்களின் மனநிலையை மேம்படுத்தியது.
உடல்நலத்திற்கான அழுகையின் பங்கு
அழுகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர், மனம்விட்டு உடனேயே அழுவாரானால், அவரின் இரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் சுரப்பியே கண்ணிலிருந்து கண்ணீரை உருவாக்குகிறது. அழுகை கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. கண்ணீரில் லைசோசைம் என்ற திரவம் உள்ளது, இது பாக்டீரியாவைக் கொல்லும் சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது.
5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உதவும். வியர்வை, சிறு நீர் உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும்.
சரி, அழுவது நல்லது தான் என்றாலும், மிதமிஞ்சி அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர். இனி உங்களுக்கு தாங்கமுடியாத பிரச்சினை காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைகுட்டையை வைத்துக்கொள்ளுங்கள்! அழுதுவிடுங்கள்!
